தூத்துக்குடி மாவட்டத்தில் தாட்கோ திட்டங்களில் பயன்பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தாட்கோ திடத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 18-65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தீவனப்புல் மற்றும் புல்கறணைகள் வளர்க்க ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விதிமுறைகளின்படி விண்ணப்பதாரர்களை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பரிந்துரைப்பார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும் அல்லது உறுப்பினராகச் சேர வேண்டும்.
பயனாளிகளுக்கு விதைத்தொகுப்பு புல்கறணைகளுடன் அத்தீவனங்களை வளர்க்க தேவையான பயிற்சி கையேடுகள் மற்றும் களப்பயிற்சி ஆகியவற்றிற்கான செலவினங்கள் ஒரு பயனாளிக்கு ஏக்கருக்கு ரூ.10000/- என்ற மானியத் தொகைக்குட்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
தாட்கோ மாவட்ட மேலாளர் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்டறிவதற்கு வழக்கமான கூட்டங்களை மாவட்ட அளவில் நடத்தி ஒவ்வொரு பயனாளியின் புகைப்பட ஆவணங்களை கட்டாயம் பரமரிக்க வேண்டும். தீவன விதைகள் ஆவின் நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படும்” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.