தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை என்பதால் பல்வேறு மனுக்கள் கொடுப்பதற்கும் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் விதமாக நூற்றுக்கணக்கான பேர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இன்று பல்வேறு மனுக்களை கொடுப்பதற்காக வட்டாட்சியர் அலுவலக வாயிலில் பொதுமக்கள் நின்று கொண்டிருந்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த “கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விளம்பர பேனர்” ஒன்று திடீரென அடித்த காற்றின் காரணமாக சரிந்து அங்கு நின்று கொண்டிருந்த பெண்களின் அருகே சரிந்து விழுந்தது.
சுமார் 10 அடி அகலம் மற்றும் 10 அடி உயரம் கொண்ட இந்த விளம்பர பேனரை நூல் கண்டு மற்றும் சணல் கொண்டு அங்கு உள்ள தூணில் கட்டி வைத்ததால் பேனர் சரிந்து விழுந்துள்ளது. எனினும் பேனர் சரிந்து விழுந்த போது அங்கு நின்று கொண்டிருந்த பெண்கள் மீது பேனர் விழாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
எனினும் இவ்வளவு உயரம் கொண்ட விளம்பர பேனரை நூல்கண்டை கொண்டு கட்டியதால் தான் பேனர் சரிந்து விழுந்ததாக அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.