தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சி-மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம்.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக உயர்வு பெற்றதாக மேயர் ஜெகன் பெரியசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் நிகழ்ச்சியில், இந்த மாதம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகளை மக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இதுவரை மாநகராட்சிக்கு 4000-க்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ள நிலையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரில் பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பூங்காக்கள் மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்காமல் இருக்க 14 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பக்கீல் ஓடையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. சாக்கடை நீர் ஓடுவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் கொசு தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி முதன்மை மாநகராட்சியாக வளர்ச்சி பெற்று வருவதாகவும், வருங்காலத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்த்து, மாநகராட்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், ஆணையர் பிரியங்கா, உதவி ஆணையர்கள் காந்திமதி, வெங்கட்ராமன், முனீர் அகமது உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் மு.மணிகண்டன்