2026 – தூத்துக்குடி ஸ்பெஷல் கவனம்!யாருக்கு சீட், மாநாட்டின் மையப் புள்ளி யார்?
தூத்துக்குடி: கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை பரவி வாழும் பரதர் குல மீனவர்கள், “இந்த முறை எங்களுக்கு சீட் வேணும்!” என்று நேரடியாக அரசியல் கட்சிகளுக்கு வலை வீசத் தொடங்கியுள்ளனர்.
“கடலில் வலை வீசினால் மீன் கிடைக்கும், அரசியலில் வலை வீசினால் சீட் கிடைக்குமா?” என்ற கேள்வி தற்போது கடற்கரை அரசியலில் டிரெண்டாகி வருகிறது!
மார்ச் 1ம் தேதி நேற்று மாலை உலக புகழ் பெற்ற பனிமய மாதா கோவில் எதிரே உள்ள ரோச் திடலில் “பரதர் குல அரசியல் உரிமை மீட்பு மாநாடு” என்ற பெயரில் பெரிய அளவிலான மாநாடு நடைபெற்றது. தொழிலதிபர் சேசையா வில்லவராயர் தலைமையில் நடந்த இந்த மாநாடு, “மீனவர்கள் இனி வாக்கு வங்கியல்ல; சீட் வங்கியாக மாறப் போகிறோம்!” என்ற மனநிலையை வெளிப்படுத்தி இருக்கிறது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய கோரிக்கைகளான, பரதர் அதிகமாக வாழும் கடலோர தொகுதிகளில் பரதர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வேண்டும், தமிழ்நாடு முழுவதும் மீனவர்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
மீன்வளத்துறை அமைச்சராக பாரம்பரிய மீனவர் நியமனம் செய்ய வேண்டும். தூத்துக்குடி தொகுதியை கிழக்கு-மேற்கு என பிரித்து கடலோர சமூகத்தவருக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்ற 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுமார் 2.36 லட்சம் வாக்காளர்கள் உள்ள தூத்துக்குடி தொகுதியில் 80,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிப்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மீனவர் அணி செயலாளர் புளோரன்ஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சேவியர், தவெக சார்பில் அஜிதா ஆக்னல், நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்செந்தூரில் ஓபிலியா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டிலைட்டா ரவி போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநாட்டில் பல கட்சிகளின் பெயர்கள் பேசப்பட்டாலும், அதிகம் ஒலித்தது தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட விரும்பும் அஜிதா ஆக்னல் பெயர்தான்.
“இது பரத குல மாநாடா? இல்லையென்றால் அஜிதா ஆதரவாளர்கள் மாநாடா?” என்ற கிசுகிசு கூட்டத்திலேயே கிளம்பியுள்ளது. ஆனால் கூட்டம் முழுவதும் “அஜிதாவுக்கு சீட்!” என்ற ஒரே ராகம் ஒலித்ததால், “கடல் முழுக்க மீன் இருந்தாலும், வலை ஒரே இடத்தில் தான் என அரசியல் வட்டாரங்கள் விமர்சிக்கின்றன. தமிழக வெற்றி கழகம் சார்பில் சீட் வழங்கப்படவில்லை என்றால், அஜிதா ஆக்னல் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கத் தயாராக இருப்பதாகவும் பேசப்படுகிறது.
தூத்துக்குடியில், அஜிதா ஆக்னல் சுயேட்சையாக களம் இறங்கினால் தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்ற கீதாஜீவனுக்கு கடும் போட்டி உருவாகும்..
2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தனி கவனத்தை ஈர்க்கும் என்பது அரசியல் பார்வையாளர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. மீனவர்கள் இம்முறை வாக்கு போட வரவில்லை வாக்கு வாங்க வருகிறார்கள் என்ற அரசியல் பஞ்ச் கடலோரங்களில் பரவி வருகிறது. சீட் கொடுத்தால் வாக்கு கிடைக்கும்; சீட் இல்லையெனில் சுயேட்சை வலை வீசும்!” இதுதான் கடற்கரை அரசியலின் தற்போதைய நிலை..
“கடலில் அலை பெரியதா? இல்ல அரசியலில் அலை பெரியதா?” என்பதற்கு 2026 தேர்தல் தான் பதில் சொல்லும்.
செய்தியாளர் மு.மணிகண்டன்