5 மாணவர்களுக்கு பி.சி.ஆர் வழக்கு – PMT தலைவர் முயற்சியால் வழக்கிலிருந்து விடுவிப்பு.!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்தப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜீவானந்தம் (16) என்ற மாணவனுக்கும், அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஐந்து மாணவர்கள் சாதி ரீதியாக பேசி மாணவன் ஜீவானந்தத்தை தாக்கியதாக கூறப்படும் நிலையில், தட்டார்மடம் காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
மேலும், விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் மாணவரின் பெற்றோரிடம் வீடியோ கால் மூலம் பேசியததை தொடர்ந்து, ஐஜி மற்றும் தூத்துக்குடி எஸ்பியிடம் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார். இந்த நிலையில், தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் வேலம்மாள், தாக்குதல் நடத்திய ஐந்து மாணவர்கள் மீது பி சி ஆர் உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா தேவர் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது., தென் தமிழகத்தில் சாதிய பிரச்சனையை தூண்டும் விதமாக சில கும்பல்கள் சுற்றி திரிகிறது. இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அருகில் இருந்த மாணவர்கள் சமாதானமாக விளக்கி உள்ளார்கள்.. இதில், பள்ளி நிர்வாகம் கண்டித்து அனுப்பி உள்ளனர். ஆனால், தென் தமிழகத்தில் தீண்டாமை கொடுமை இருக்கிறது என்று ஒரு சில கும்பல் பரப்பி வருகிறது.
இந்த பிரச்சனை முடிந்து ஆறு நாட்கள் ஆகியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் மீண்டும் இந்த பிரச்சனையை கிளப்பி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளியாக ஆக்கப்பட்டுள்ளார்கள்..
ஆகவே, தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், மாவட்ட காவல்துறை காவல் கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் ஐந்து மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், இரு தரப்பினருடனும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சம்பவம் குறித்த அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டதன் பின்னர், ஐந்து மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆகவே, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் இசக்கி ராஜா தேவர், காவல்துறைக்கும், முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் சுமுகமாக முடிவடைந்துள்ள நிலையில், கல்வி நிலையங்களில் மாணவர்களிடையே நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் மு.மணிகண்டன்