தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட அறிக்கை வெளியீடு.!

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட அறிக்கை வெளியீடு.!

தூத்துக்குடி: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் இந்தியர் கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டமும், முதல் கட்ட தேர்தல் அறிக்கையும் தூத்துக்குடி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் என்.பி. ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பொன்ராஜ் மற்றும் மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குறுதிகளை மாநில தலைவர் என்.பி. ராஜா வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலவசங்களை வழங்கி வாக்குகளை பெற வேண்டும் என்ற அரசியல் சிந்தனை மாற வேண்டும். தமிழர்கள் அறிவிலும் திறமையிலும் முன்னோடி மக்கள். இலவசங்களுக்கு வாக்களிக்கும் நிலை மாற வேண்டும். மற்ற மாநிலங்கள் தமிழக அரசியலை இலவச அரசியலாக நினைக்கக் கூடாது. கடன் வாங்காமல் பாதுகாப்பான மற்றும் சீரான நிர்வாகத்தை வழங்க வேண்டும்.

“நகரங்கள், மாநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அருகில் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைத்து, 10 லிட்டர் கேன்களில் குடிநீர் இலவசமாக வழங்கப்படும். அதேபோல், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான தரத்தில் இலவச மருத்துவ சேவையும் வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசு திமுக குழுக்களை அமைத்து மக்கள் குறைகளை கேட்டு வருவதாக கூறுகிறது. இது அரசின் நிர்வாக நிலையை எடுத்துக்காட்டுகிறது.

நடிகர் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "விஜயை இளைஞர்கள் நம்பிக்கை வைத்து பார்க்கிறார்கள். ஆனால் அரசியலில் மாற்றம் வர வேண்டும் என்றால் கொள்கை பிடிப்பு இருக்க வேண்டும். இலவச அறிவிப்புகள் மட்டும் போதாது. அதிமுக ரூ.10 ஆயிரம் வழங்குவோம் என்று கூறுவது வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் அரசியல் என்றார்.

“எங்களுடன் கொள்கை மற்றும் வாக்குறுதிகளில் உடன்படும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம். 100 தொகுதிகள் வரை போட்டியிடும் எண்ணமும் உள்ளது.

வேடநத்தம் பாலியல் பலாத்காரம் வழக்கு குறித்து பேசுகையில், "தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டாலும் குற்றவாளியை கண்டுபிடிக்க ஐந்து நாட்கள் ஆனது என்பது அரசு மற்றும் காவல்துறைக்கு அவப்பெயர். குற்றவாளிகளை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும்.

“இளைஞர்களிடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து வருகிறது. திரைப்படங்களில் கஞ்சாவை போற்றி பாடல்கள் எழுதப்படுகின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். குடும்ப பாங்கான, உழைப்பை மதிக்கும் திரைப்படங்கள் அதிகம் வர வேண்டும்.

“ஒரு காவல் நிலையத்தில் குறைந்தது 50 காவலர்கள் இருக்க வேண்டும். காவல்துறையில் பணியாளர்களை அதிகரித்தால் குற்ற சம்பவங்கள் குறையும்.

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பில் திமுகவை விட விஜய் அதிக வாக்கு சதவீதம் பெறுவார் என்ற கேள்விக்கு? "விஜய்க்கு மக்கள் செல்வாக்கும் ரசிகர் ஆதரவும் உள்ளது. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளாக நாங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறோம். மக்களின் நாடி நரம்பை அறிந்து நேர்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

“ஆளுங்கட்சியை தோற்கடிக்க விஜயின் வாக்குகள் தேவை என பாஜக நினைக்கலாம். ஆனால் பணம், சொத்து அல்லது அதிகாரம் இல்லாதவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்க முடியாது.

“தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறும் நோக்குடன் செயல்பட்டு வருகிறோம். தூத்துக்குடியில் எளிதாக வெற்றி பெற முடியும். என்றார்.