சீமான் 234 ‘குண்டுகள்’ வீச்சு: கோவில்பட்டியில் புரட்சிக்குரல் எழுப்பிய வேட்பாளர் பூ. பாண்டி.!

சீமான் 234 ‘குண்டுகள்’ வீச்சு: கோவில்பட்டியில் புரட்சிக்குரல் எழுப்பிய வேட்பாளர் பூ. பாண்டி.!

தூத்துக்குடி : 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் பூ. பாண்டி இன்று நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் தீவிர அரசியல் உரையால் கவனத்தை ஈர்த்தார்.

கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் திரளாகக் கலந்துகொண்ட கூட்டத்தில் அவர் பேசும் போது, “நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் தேர்தலை முன்னிட்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 234 துப்பாக்கி குண்டுகளை வீசியுள்ளார். அதில் ஒரு குண்டாகத்தான் நான் இங்கு வந்து விழுந்திருக்கிறேன். இந்த குண்டு கோவில்பட்டி மண்ணில் அநீதிக்கு எதிராக ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்றதும் அவரது இந்த உணர்வுப்பூர்வமான பேச்சு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அவர் பேசும் போது, கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படவில்லை. நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் கோவில்பட்டியை தலைமை இடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும். 

கோவில்பட்டி மாநகராட்சியாக உயர்த்தப்படும். கயத்தாறு நகராட்சியாக மாற்றப்படும். கழுகுமலை தலைமை இடமாக கொண்டு தாலுகா அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்கப்படும். 

காமநாயக்கன்பட்டி தலைமை இடமாக கொண்டு பேரூராட்சி உருவாக்கப்படும். கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் பகுதியில் பட்டா இல்லாமல் அவதிப்படும் மக்களுக்கு உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.. மேலும், “நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் இதை நிறைவேற்றவில்லை என்றால், ஏழாவது மாதம் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்,” என்று உறுதியளித்தார்.

உரையின் இறுதியில், “வரும் தேர்தல் தமிழருக்கானதா? அல்லது திராவிடருக்கானதா? இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவோம்,” என சவால் விடுத்தார்.

இந்த கூட்டம் கோவில்பட்டியில் அரசியல் சூழ்நிலையை சூடுபிடிக்கச் செய்துள்ளது. தேர்தல் களத்தில் நாம் தமிழர் கட்சியின் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பூ. பாண்டியின் இந்த உரை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது