“வெற்றி நிச்சயம்” இருந்து “சந்தேகம்” வரை அதிமுக பயணம்!

“வெற்றி நிச்சயம்” இருந்து “சந்தேகம்” வரை அதிமுக பயணம்!

தூத்துக்குடி: தேர்தல் காற்று வீசத் தொடங்கியதும், தூத்துக்குடி மாநகரம் முழுவதும் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. “இந்த முறை யார் வெற்றி?” என்ற கேள்வி தேநீர் கடை முதல் தெரு மூலை வரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில், அதிமுக சார்பில் சி.த. செல்ல பாண்டியன் களமிறங்கியுள்ளார். எளிமை, நல்ல மனம், அனைவருடனும் பழகும் தன்மை ஆகியவை அவருக்கு நல்ல பெயரைத் தந்திருந்தாலும், தரை மட்டத்தில் சில கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

“இவர் உண்மையிலேயே தீவிரமாக களத்தில் இறங்கியிருக்கிறாரா?” என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் வலுப்பெற்று வருகிறது.

நாட்கள் கடந்து செல்லும் நிலையில், தேர்தல் பணிகளில் மந்தமாகவும், வீடு வீடாகச் சந்திப்பு இல்லாமலும், தெருமுனைப் பிரச்சாரங்களிலேயே கவனம் செலுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் கணிசமாகத் தெரியாததால் ஆதரவாளர்களுக்குள்ளேயே குழப்பம் நிலவி வருகிறது. 

இதற்கிடையில், கட்சிக்குள் “ஜாக்சன் துரை” என்ற ஒருவர் வேட்பாளரை பின்னாலிருந்து இயக்குவதாகவும், அவர் சொல்வதைத்தான் மலை போல் நம்புவதாகாவும் என்ற கிசு கிசு பேச்சுக்கள் வேகமாக பரவி வருகிறது. 

அதே நேரத்தில், ஜாக்சன் துரை கட்சிக்குள் அணிக்கு அணி மாறிக்கொண்டே இருப்பவர் என்ற விமர்சனமும் எழுகிறது. “எல்லாமே என்னைச் சுற்றிதான் நடக்க வேண்டும்” என்ற மனோபாவம் கொண்டவராம்.. 

கட்சிக்காக இதுவரை எந்த முக்கிய பங்களிப்பும் செய்யவில்லை. துரும்பைக் கூட எடுத்துப் போட்டதில்லை, அடிப்படை பணிகளில் ஈடுபட்டதில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுகிறது. ஆனால் அதே நேரத்தில், அரசியல் மேடையில் தன்னை வெளிப்படையாகத் தெரியும் விதமாக ஒரு பிம்பத்தை கட்டமைப்பார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இவரின் இந்த செயல்பாடால் தேர்தல் நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் கூட்டணியில் பேச தொடங்கிவிட்டனர்.

“ஜாக்சன் துரை ஒரு பக்கம் இருக்க, வேட்பாளருக்கு நெருக்கமான சிலர் தவறான ஆலோசனைகளை வழங்கி, அவரை சரியான பாதையிலிருந்து விலக்கி வருகிறார்கள்” என்று கூறப்படுகிறது. "இந்த நிலை தொடர்ந்தால், வெற்றி மட்டும் அல்ல, டெபாசிட் கூட கேள்விக்குறியாகிவிடும்” என சிலர் திறந்தவெளியிலேயே கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

“தூத்துக்குடி கிழக்குப் பகுதி ஒரு காலத்தில் அதிமுக வலுவான கோட்டையாக இருந்து வந்தது. பின்னர் சில காரணங்களால் அது திமுக ஆதிக்கப் பகுதியாக மாறியது.

தற்போது விஜய் அரசியல் களத்தில் இருப்பதால், அந்த வாக்குகள் பெருமளவில் அவரை நோக்கி திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாக்கு சிதறல் ஏற்பட்டு, அதன் விளைவாக அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உருவாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.”

“அப்படியான சூழலில், இன்னும் சில முக்கியமான அம்சங்களை சரியாக கட்டமைத்து, திட்டமிட்டு செயல்பட்டால் சரியான பாதையில் சென்று வெற்றியை உறுதியாகப் பெற முடியும். “ஆனால், ஜாக்சன் துரை மற்றும் வேட்பாளரின் நெருங்கிய சிலரின் செயல்பாடுகள் காரணமாக, இருந்த வெற்றி வாய்ப்பு கூட தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளதாக “இலை கட்சியினர் மட்டுமின்றி, கூட்டணி கட்சியினரும் தற்போதைய நிலைமை குறித்து மனம் வெந்து வெளிப்படையாக பேசத் தொடங்கியுள்ளனர்.

“வெற்றி, தோல்வி என்பது அரசியலில் சகஜமான விஷயமாக இருந்தாலும், குறைந்தது ஒரு கணிசமான வாக்கு வித்தியாசத்தை பெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. ஆனால் தற்போதைய சூழ்நிலையில், டெபாசிட்டை கூட காக்கப் பெறுவது கடினமாக இருக்கலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது

“ஆமை புகுந்த வீடு விளங்குமா?”