அம்மா பிறந்தநாள் விழா: சேலை வழங்கலில் பரபரப்பு – நள்ளிரவு வரை நீண்ட நலத்திட்ட உதவி.!

அம்மா பிறந்தநாள் விழா: சேலை வழங்கலில் பரபரப்பு – நள்ளிரவு வரை நீண்ட நலத்திட்ட உதவி.!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள தட்டார்மடம் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு 5000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த விழா முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. மாநாடு போல் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை பல்வேறு நிர்வாகிகள் உரையாற்றினர். பின்னர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இரு பயனாளிகளுக்கு மட்டுமே நலத்திட்ட உதவிகளை வழங்கி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், சேலை வழங்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

“நாங்கள் அம்மா பிறந்தநாளுக்காக வரவில்லை, சேலைக்காக வந்தோம்” எனக் கூறிய சில பெண்கள் மேடையை நோக்கி திரண்டனர். மேடையில் இருந்த ஐந்து பேர் சேலை வழங்க முயன்றபோதும், பெண்கள் கூட்டமாக முனைந்து சேலை பெற முயன்றதால் தள்ளுமுள்ளு நிலை ஏற்பட்டது. கையில் டோக்கன் வைத்திருந்த ஆண்களும், பெண்களும் சேலை பெற போராடியதாக கூறப்படுகிறது. சிலர் கூட்ட நெரிசலில் சிக்கித் தத்தளித்தனர். சிலர் பொறுமையை இழந்து கட்டுகளாக வைத்திருந்த சேலைகளை எடுத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிலர் “இந்த நிறம் வேண்டாம், வேறு நிறம் வேண்டும்” என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நலத்திட்ட உதவி நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. சில பெண்கள் டோக்கனை அங்கிருந்தபடியே விட்டுவிட்டு, பாதுகாப்பாக வீட்டிற்கு திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்குமுறை அவசியம் பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது, கூட்ட நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக இருந்தால் மட்டுமே பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்பெற முடியும். இல்லையெனில், இத்தகைய தள்ளுமுள்ளு மற்றும் அபாயகரமான சூழ்நிலைகள் உருவாகும் அபாயம் உள்ளது.