தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் பகுதியில் செல்லப்பாண்டியன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை அவரது கடை அருகே வாகனத்தை நிறுத்தி சரக்குகள் இறக்கி கொண்டிருந்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் இன்று கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
அப்போது வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது… வியாபாரிகள் பேசுகையில், மார்க்கெட் அருகே ரோட்டை இரண்டாக பிரித்து இருக்கிறீர்கள்..ஏன் பெரிய சூப்பர் மார்க்கெட் அருகே ரோட்டை இரண்டாக பிரிக்க வேண்டியது தானே. வண்டி நின்றதுக்கு கடையை சீல் வைத்தால் எப்படி என வியாபாரிகள் கேட்க, அதற்கு மாநகராட்சி அலுவலர் கூறுகையில், நாங்கள் அவர்கள் சொன்னதை கேட்கிறோம்.. நாங்கள் வெறும் அம்பு தான். ஏவியவர்களை கேட்டு கொள்ளுங்கள் என்கிறார்.. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது..
மேலும், இதுகுறித்து அப்பகுதி வியபாரிகள் கூறுகையில், போக்குவரத்து ஏற்படுத்தியதற்காக கடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். இது எந்த விதத்திலும் நியாயம் இல்லை… ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் இவ்வாறு செயல்படுகின்றனர் என்றனர்..
மேலும், சீல் வைக்கப்பட்ட கடையின் வியாபாரி செல்லப்பாண்டியன் தனது மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட அவரது மனைவி சசிகலா (40) என்பவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.