டாப் 5ல் இடம்பிடித்த பும்ரா.. இஷாந்த் சர்மா சாதனை க்ளோஸ்.. இனி ஒவ்வொரு விக்கெட்டும் ரெக்கார்டு தான்!
தற்போது நடைபெற்று வரும் IND vs AUS தொடரில், ஜஸ்பிரித் பும்ரா இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் முதல் 5 பட்டியலில் இஷாந்த் ஷர்மாவை முறியடித்துள்ளார். அவரது சிறப்பான ஆட்டம் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது அந்தஸ்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக புதிய சாதனையை படைத்துள்ளார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 311 ரன்களை குவித்துள்ளது. நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடனும், பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.
தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, ட்ராவிஸ் ஹெட் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோரின் விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார்.
இதன் மூலமாக ஒரே டெஸ்ட் தொடரில் பும்ரா முதல்முறையாக 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று 3 வடிவங்களிலும் சேர்த்து 435 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் காரணமாக 434 விக்கெட்டுகளுடன் இஷாந்த் சர்மா 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தப் பட்டியலில் 687 விக்கெட்டுகளை வீழ்த்தி கபில் தேவ் முதலிடத்திலும், 597 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜாகீர் கான் 2வது இடத்திலும், 551 விக்கெட்டுகளை வீழ்த்தி ஜவஹல் ஸ்ரீநாத் 3வது இடத்திலும், 448 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி 4வது இடத்திலும் உள்ளனர். இதுவரை ஜஸ்பிரிட் பும்ரா டெஸ்ட் கிரிக்கெட்டில் 197 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 149 விக்கெட்டுகளையும், டி20ல் 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 44வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வரும் பும்ரா இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்திய அணிக்காக 200 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். அதேபோல் ஒரே டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைப்பார். இதன் காரணமாக பும்ரா அடுத்தடுத்து வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டும் சாதனைகளாக மாறும் நிலை உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பும்ராவை பாராட்டி வருகின்றனர்.
What's Your Reaction?