Thupparithal
செய்திகள்

தூத்துக்குடி அருகே பிஸ்கட் பாக்கெட்டினை பூச்சியுடன் பொட்டலமிட்ட அய்யங்கார் பேக்கரி மூடப்பட்டது. கடந்த 2 மாதங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 கடைகள் மூடப்பட்டது: எந்தெந்த கடைகள் மூடப்பட்டது என்பது குறித்தான முழு தகவல்…

தூத்துக்குடி மாவட்டம், தெய்வச்செயல்புரத்தில் அய்யங்கார் பேக்கரி செயல்பட்டு வருகிறது… இந்த பேக்கரியில் வைன் பிஸ்கட் பூச்சியுடன் பொட்டலமிடப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் டாக்டர். மாரியப்பன் உத்தரவின் பேரில், ஶ்ரீவைகுண்டம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொ) காளிமுத்து பேக்கரியை நேற்று (27.10.2023) மாலை ஆய்வு செய்தார்.

அவ்வாய்வின் போது, பேக்கரியில் சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதுடன், செல்லத்தக்க உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாததும் கண்டறியப்பட்டது. எனவே, உடனடியாக அந்த பேக்கரியின் இயக்கம் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும், இவ்விவகாரத்தில் விசாரணை மேற்கொண்டு, முன்னேற்ற அறிவிப்பு வழங்கவும், உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் வணிகம் புரிந்த குற்றத்திற்காக வழக்கு பதிவும் செய்யப்பட உள்ளது…

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களான, சிவக்குமார், சக்திமுருகன், ஜோதிபாஸூ மற்றும் காளிமுத்து ஆகியோர் மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட திடீர் ஆய்வின் போது, கடந்த இரண்டு மாதங்களில் பின்வரும் 10 உணவு வணிக நிறுவனங்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம்/பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் மேற்கொண்டது அறியப்பட்டு, மூடப்பட்டது. மேலும், இரண்டு கடைகள் தமது விற்றுக்கொள்முதலைக் குறைத்துக் காண்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்திற்குப் பதிலாக, பதிவுச் சான்றிதழ் பெற்ற இரண்டு உணவகங்களும் மூடப்பட்டன. அதன் பின்னர், அவ்வணிகர்கள் இணையதளம் மூலமாக உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து, அதனைப் பெற்ற பின்னர் கடைகள் மீண்டும் திறந்துவிடப்பட்டன. உணவு பாதுகாப்பு உரிமம் இன்றி உணவு வணிகம் புரிந்த குற்றத்திற்காகவும், தவறான தகவல் வழங்கி, பதிவுச் சான்றிதழ் பெற்ற குற்றத்திற்காகவும், அவ்வணிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மூடப்பட்ட கடைகளின் விபரங்களான; தூத்துக்குடி ஒன்றியம்: புதுக்கோட்டையில் செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் செல்வம்… விளாத்திகுளம் ஒன்றியம்: விளாத்திகுளத்தில் செல்வின் என்பவற்கு சொந்தமான வின்சி சிக்கன் ஸ்பாட். காயல்பட்டினம் நகராட்சி: ருத் என்பவருக்குச் சொந்தமான சென்னை பிரியாணி கடை மற்றும் நிலோபர் என்பவருக்கு சொந்தமான நிலா பேமிலி ரெஸ்டாரண்ட். தூத்துக்குடி மாநகராட்சி: எட்டையபுரம் சாலையில் குமரேசன் என்பவருக்குச் சொந்தமான நாராயண நைட் கிளப் மற்றும் ராபின்சன் என்பவருக்குச் சொந்தமான ஷவர்மா பாயிண்ட் உணவகம். வ.உ.சி.மார்க்கெட் அருகில் ஜான் என்பவருக்கு சொந்தமான ஃபேமஸ் நைட் கிளப். அண்ணா நகரில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான குரு பீப் ஸ்டால் மற்றும் காளி என்பவருக்கு சொந்தமான காளி பிரியாணி. தருவை மைதானம் அருகில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆர்.சி.ஜே பீப் ஸ்டால். தமிழ் சாலையில் லியோ என்பவருக்குச் சொந்தமான எம்-ஸ்கொயர் உணவகம். கோவில்பட்டி நகராட்சி: சண்முகராஜா என்பவருக்கு சொந்தமான ரைட்வே ஹெல்த் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகிய கடைகளாகும்..

மேலும், வணிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ உணவு வணிகம் புரிவதும், உணவு பாதுகாப்பு உரிமத்தில் அனுமதிக்கப்படாத உணவுப் பொருட்களை தயாரிப்பதும் சட்ட விதிமீறல் என்பதால், உணவு பாதுகாப்புத் துறையால் சம்பந்தப்பட்ட உணவு வணிக நிறுவனம்/கடை மூடப்படும் என்பதுடன், நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், நுகர்வோர்களும் உணவுப் பொருட்களை வாங்கும் போது, கடைக்கு FSSAI உரிம எண் உள்ளதா என்பதைக் கவனித்துப் பார்த்து வாங்குமாறும், உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சுகாதாரக் குறைபாடுகள் குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும் என்றும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுலவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்..

Related posts

7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாஸ் தி பால் கோப்பைக்கான வரவேற்பு – ஹாக்கி விளையாடிய அமைச்சர் கீதா ஜீவன்,, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்.

Admin

தூத்துக்குடி அருகே, கோயில் சுற்றுச்சுவர் எழுப்ப இடையூறு, சட்ட போராட்டம் செய்து வெற்றி பெற்ற பின்னரும், எதிர் தரப்பினரிடம் இருந்து உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் கோவில் நிர்வாகிகள் வேண்டுகோள்!.

Admin

இலம்பி தோல் கழலை நோய் தாக்கிய மாடுகளுக்கு கால்நடை மருந்தகங்களில் சிகிச்சை; ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தல்!.

Admin

Leave a Comment

error: Content is protected !!