ஸ்பிக் நிறுவனம் வசமுள்ள புறம்போக்கு நிலத்தை மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு..!

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் வசமுள்ள 72.59 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
தூத்துக்குடியில் ஸ்பிக் உர தயாரிப்பு நிறுவனத்துக்கு 1971 ஆம் ஆண்டில் முள்ளக்காடு, கோரம்பள்ளம் ஆகிய கிராம பகுதிகளில் 421 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் வழங்கப்பட்டது. தனியாரிடம் மேலும் 810 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உரம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்பிக் நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 663 ஏக்கர் நிலத்தில் விவசாய பயன்பாட்டில் இருந்து விலக்கு அளித்து 2002ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இது 72.59 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலமும் அடங்கும். இந்த நிலங்களை மீண்டும் அரசுக்கு மாற்றி நெல்லை நில நிர்வாக ஆணையர் கடந்த 2007 ஆம் ஆண்டில் உத்திரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக ஸ்பிக் நிறுவனம் மற்றும் அல்காரி கெமிக்கல் நிறுவனம் ஆகியவை வேளாண் நில தீர்ப்பாயத்தில் தனித்தனியாக மேல்முறையீடு செய்தன. இந்த மனுக்கள் 2014ல் தள்ளுபடி ஆனது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி இரு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனுக்களை நீதிபதி செந்தில்குமார் விசாரித்தார்.
அப்போது அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட அரசு நிலங்களில் தொழிற்சாலை அமைப்பதால் ஏற்படும் விளைவுகளை மனதாரர் தரப்பினர் நன்கு அறிந்திருக்கிறார்கள். இதற்கான விலக்குகளை அவர்கள் முறையாக பெறவில்லை. மேற்கண்ட நிலங்களை எந்த சட்ட அனுமதி இல்லாமல் மனுதாரர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அந்த நிலங்களை உடனடியாக அரசு மீட்க வேண்டும். மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
What's Your Reaction?






