சீட்டு பணத்தை ஏமாற்றிய ஒரே குடும்பத்தினர்., பாதிக்கப்பட்ட இளைஞர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு.!

4 லட்சம் சீட்டு பணத்தை ஏமாற்றிய ஒரே குடும்பத்தினர். பணத்தை திருப்பி கேட்ட போது தர மறுத்து காவல் நிலையத்தில் முந்திக்கொண்டு பொய் புகார் அளித்த அந்த குடும்பம். இளைஞர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!
தூத்துக்குடி மாவட்டம், சங்கரப்பேரி அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் காளியப்பன் (24), இவர் அப்பகுதியில் ஃபிரைட் ரைஸ் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியில் நாராயணசாமி என்பவர் குடியிருந்து வரும் நிலையில், இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக சீட்டு போடுவது போன்ற பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். நாராயணசாமி அவரது மனைவி கிருஷ்ணவேணி, மகள் சந்தான லட்சுமி, அவரது கணவர் வீராசாமி ஆகியோர் ஒரு லட்சம் ரூபாய் சீட்டு நடத்தி வந்துள்ளார்கள். அதற்காக நான்கு நபர்களும் அப்பகுதியில் உள்ள வீட்டில் கூட்டாக சென்று சீட்டுக்கு மார்க்கெட்டிங் செய்து வந்துள்ளனர்.
அதன்படி அந்த இளைஞரும் நான்கு சீட்டுகள் கட்ட ஒப்புக்கொண்டு 15.3.2023 அன்று தொடங்கி ஒவ்வொரு 15ஆம் தேதியும் தலா ஒரு சீட்டுக்கு 5000 வீதம் கட்டி வந்த நிலையில், மாதாமாதம் 20 ஆயிரம் ரூபாய் கட்டி வந்துள்ளார். அவர் கட்டிய நான்கு சீட்டுகளும் ஒன்றன்பின், ஒன்றாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தரவேண்டிய நான்கு லட்சம் ரூபாயை நான்கு பெரும் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். ஏன் இவ்வாறு சீட்டு பணத்தை தர மறுக்கிறீர்கள் என கேட்டபோது தங்களிடம் பணம் குறைவாக இருப்பதாகவும் ஒரு சில நாட்களில் தருவதாகவும் காலம் தாழ்த்தியுள்ளார்கள்.
பின்பு ஒரு கட்டத்தில் சீட்டை தர முடியாது உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொள் என்றும், எனது மகளும், மருமகனும் சீட்டு பணத்தை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு ஓடி விட்டார்கள். அதனால் பணத்தை தர முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்த நிலையில் திடீரென நாராயணசாமியும் அவரது மனைவியும் சிப்காட் காவல் நிலையத்தில் இளைஞன் காளியப்பன் கழுத்தை பிடித்து நெரித்ததாக பொய்யான புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதற்கு காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமும் அளித்துள்ளார் அந்த இளைஞன்.
இந்த நிலையில் என்னை சீட்டு போட சொல்லி நம்பிக்கை மோசடி செய்து அதனை கேட்கச் சென்ற என் மீது காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
What's Your Reaction?






